பணவீக்கத்தால் மிகவும் பாதிக்கப்படும் பிரிவினரை அடையாளம் காண்பதற்கு முன்னர், பொதுவான விலை மட்டம், பணவீக்கம், பெயரளவு வருமானம், உண்மை வருமானம் மற்றும் கொள்வனவுச் சக்தி ஆகிய கருத்துக்களைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
பொதுவான விலை மட்டம் (ஒட்டுமொத்த விலை மட்டம் / சராசரி விலை மட்டம்)
பொதுவான விலை மட்டம் என்பது அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை விலைகளின் சராசரி அளவைக் குறிக்கின்றது.
பணவீக்கம்
பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பொதுவான விலை மட்டம் தொடர்ச்சியாக அதிகரிப்பதைக் குறிக்கின்றது.
பெயரளவு வருமானம் (பண வருமானம்)
பெயரளவு வருமானம் என்பது ஒரு நபர் ஊதியம், வாடகை, வட்டி மற்றும் இலாபம் ஆகிய வடிவங்களில் ஈட்டும் வருமானத்தைக் குறிக்கின்றது.
உண்மை வருமானம்
உண்மை வருமானம் என்பது பெயரளவு வருமானத்தைக் கொண்டு கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவைக் குறிக்கின்றது.
கொள்வனவுச் சக்தி (பணத்தின் பெறுமதி)
கொள்வனவுச் சக்தி என்பது ஒரு பண அலகைக் கொண்டு கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவைக் குறிக்கின்றது.
பணவீக்கத்தின் காரணமாக மிகவும் பாதிக்கப்படும் மூன்று பிரிவினர் உள்ளனர்.
நிலையான பெயரளவு வருமானம் பெறுவோர்
சேமிப்பாளர்கள்
கடன் வழங்குநர்கள்
1. நிலையான பெயரளவு வருமானம் பெறுவோர்
அரச ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் அரசாங்கத்தின் நலன்புரிக் கொடுப்பனவுகளில் தங்கியிருப்போர் ஆகியோரை நிலையான வருமானம் பெறுவோராகக் குறிப்பிடலாம்.
பணவீக்கம் ஏற்படும் போது, அவர்களின் பெயரளவு வருமானம் அதிகரிக்காத காரணத்தினால் உண்மை வருமானம் குறைகின்றது. இதன் விளைவாக அவர்களின் கொள்வனவுச் சக்தி குறைந்து, அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
2. சேமிப்பாளர்கள்
எதிர்காலத்தில் செலவிடும் நோக்கத்துடன் மக்கள் பணத்தைச் சேமிக்கின்றனர். ஆனால், பணவீக்கத்தின் காரணமாக அவ்வாறு சேமிக்கப்படும் பணத்தின் உண்மையான பெறுமதி அல்லது கொள்வனவுச் சக்தி குறைகின்றது.
அதாவது, இன்று சேமிக்கப்படும் அதே அளவு பணத்தைக் கொண்டு இன்று கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அதே அளவை எதிர்காலத்தில் பணவீக்கத்தின் காரணமாக கொள்வனவு செய்ய முடியாது.
3. கடன் வழங்குநர்கள்
கடன் வழங்குநர் என்பவர் மற்றொருவருக்குப் பணத்தைக் கடனாக வழங்குபவர் ஆவார்.
ஒரு வருடத்திற்குப் பின்னர் திருப்பிச் செலுத்தப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், இன்று நீங்கள் ஒருவருக்கு ரூ. 100,000 கடனாக வழங்கியதாகக் கருதுவோம்.
பணவீக்கத்தின் காரணமாக இன்று ரூ. 100,000 கொண்டு கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அதே அளவை ஒரு வருடத்திற்குப் பின்னர் அதே தொகையைக் கொண்டு கொள்வனவு செய்ய முடியாது.
இத்தகைய சூழ்நிலையில், கடன் வழங்குநரான உங்களுக்கு இழப்பு ஏற்படுகின்றது.
